திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்திருந்தார். அதேபோல் கார்த்திகை தீபத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோவிலில் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நிகழ்ச்சியில் 30 லட்சம் மக்கள் பங்கு கொள்ள வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பாதுகாப்பு பணிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது எனச் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண நாளை ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படும் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், அதே நாள் மாலை 6 மணிக்கு மகா தீபத்தை காண்பதற்கு 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள், 500 ரூபாய் கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு இதற்கான முதல் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைமேல் செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் மக்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.