திருவண்ணாமலை நகரத்தில் கரூர்வைஸ்யா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்கநகை அடமானம் வைத்து ஆயிரக்கணக்கானவர்கள் கடன் பெற்றுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் ஆவர். அடமானத்துக்கு வந்த தங்கநகைகளை வாங்கி வங்கி அதிகாரிகள் லாக்கரில் வைத்துள்ளனர். வங்கியில் உள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு தங்கநகைகளை திருடிவிட்டு அதற்கு பதில் டூப்ளிக்கெட் அதாவது கவரிங் நகைகளை லாக்கரில் வைத்துள்ளனர்.
மாதந்தோறும் வங்கியில் ஆடிட்டிங் நடக்கும். அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற்ற தணிக்கையின் போது, தணிக்கை செய்த அதிகாரிகள் லாக்கரில் உள்ள நகை இருப்பில் குளறுபடி நடந்துயிருப்பதை கண்டு, உடனே சரிச்செய்யுங்கள் இல்லையேல் புகார் தரப்படும் எனக்கூறி சென்றுள்ளனர். தங்கநகைக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது, வங்கி மேலாளர் குற்றம்சாட்டியுள்ளார், வங்கி மேலாளர் மீது மற்ற ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த பிரச்சனை நடந்துக்கொண்டுயிருக்க செய்தியாளர்கள் மூலமாக இந்த விவகாரம் வெளியே வந்தது. விவகாரம் பத்திரிகை, மீடியா என வந்ததும், வங்கியின் அதிகாரிகள், திருவண்ணாமலையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் சென்று கண்ணை கசக்கியுள்ளனர். அவர் மீடியாக்களை ஆப் செய்து விவகாரத்தை அமுக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22ந்தேதி வங்கியில் இருந்த 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.
இதுப்பற்றி காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் வைஸ்யா வங்கியின் விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் முதன்மை மேலாளராக பணியாற்றும் முரளி தந்துள்ள புகாரில், திருவண்ணாமலை கிளையில் முதுநிலை மேலாளராக சுரேஷ்சும், வங்கியின் செயல்பாட்டு மேலாளராக லாரண்யாவும், நகைக்கடன் அதிகாரியாக சந்தானஹரிவிக்னேஷ்சும், நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த பணியாளர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் பணியாற்றுகிறார்கள்.
ஒருவர் தங்கநகை அடகு வைக்க வந்தால், மதிப்பீட்டாளர்களிடம் தருவார்கள், அவர்கள் சரிப்பார்த்து நகைக்கடன் அதிகாரி, அதற்கான ஆவணங்களை பூர்த்தி செய்து, ஆப்ரேட்டிங் மேலாளரிடம் தருவார், கடன் தரப்பட்டதும், தங்கநகைகளை அவர்கள் தான் கொண்டு சென்று லாக்கரில் வைப்பார்கள். இந்த இருவரும் தான் பொறுப்பான அதிகாரிகள்.
நாங்கள் கணக்குகளை ஆய்வு செய்தபோது, தனிநபர் ஒருவருக்கு நகைக்கடன் 25 லட்சம் மட்டும்மே வழங்கப்படவேண்டும் என்பது விதி. ஆனால் விதிகளை மீறி விஜயா என்பவருக்கு 28,70,000 ஆயிரம் வழங்கப்பட்டுயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, விஜயா மற்றும் அவரிடம் வேலை செய்யும் விநோத்குமார் என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு நகைமதிப்பீட்டாளர்கள், ஆப்ரேட்டிங் மேனேஜர் மற்றும் தங்கநகை கடன் பிரிவு அதிகாரி ஆகியோர் கூட்டு சேர்ந்து கடன் எடுத்தும், அடைத்தும் உள்ளனர்.
அதன்பின் வங்கி லாக்கரில் உள்ள அடகுவைக்கப்பட்டுள்ள தங்கநகைகளை சரிப்பார்த்தபோது, தங்கநகைகள் வைக்கப்பட்ட 20 பைகள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது. அதன் மொத்த எடை 3710 கிராம். இதன் மதிப்பு 1 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகும். இந்த தங்கநகைகளை யார் எடுத்தது என சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மே 10 ந்தேதி முதல் 13ந்தேதி வரையிலான பதிவுகள் அழிக்கப்பட்டுயிருப்பது கண்டறிந்தோம் என புகார் தந்தார்கள்.
இந்த புகாரை விசாரித்தபோது, முதுநிலை மேலாளர் சுரேஷ், தங்கநகை கடன் மற்றும் பெட்டக பொறுப்பாளர் சந்தானஹரிவிக்னேஷ், வங்கி செயல்பாட்டு மேலாளர் லாரண்யா, உதவிமேலாளர்கள் தேன்மொழி, இசைவாணி, தங்கநகை மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர்க்கு இந்த தங்கநகை காணாமல் போன விவகாரத்தில் ஒருவருக்கொருவர்க்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவருகிறது என்பதால் இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம் என்றுள்ளார்கள்.
இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், மூன்று பேர் பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.