தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா. இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா கடந்த 14-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடந்துவந்து கொண்டிருக்கிறது. இன்று ( 20.11.18 ) மகாரதம் தேரோட்டத்தை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்துள்ளனர். தேர்கள் மாடவீதியில் பவனி வருகின்றன.
வரும் 23 ஆம் தேதி விடியற்காலை நான்கு மணிக்கு அண்ணாமலையார் கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2660 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோயிலுக்குள் இருந்தபடி காண ஒவ்வொரு பக்தரும் விரும்புவர். இதற்காக கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு கலரில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வந்தது. இதில் ஏகப்பட்ட ஊழலும், குளறுபடியும் நடந்ததால் அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கோயிலுக்குள் இருந்து சாமி தரிசனம் செய்தவற்கு முதல் உரிமைதாரர்கள் காலம் காலமாக கோயிலுக்காக பல பணிகள் செய்து வரும் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர்கள் முக்கியமானவர்கள். அதற்கடுத்து அரசு கெஜட்படி அரசு உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி அனுமதி அட்டைகள் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்தன. அதிலும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் பெயரில் கோயில் நிர்வாகம்மே பாஸ்களை அச்சடித்து தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியது, கோயில் பணியாளர்கள் பலர் அதை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெளியே விற்பனையும் செய்தனர். இதுவும் சர்ச்சையானது. இந்நிலையில் பாஸ் வழங்குவதில் இந்த ஆண்டு ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரே பாஸ்களை வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பாஸ்களை வழங்குகிறார் என்கிறார்கள் கோயில் அதிகாரிகள். அதில் மோதலும் ஏற்பட்டுள்ளது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய கோயில் ஊழியர் ஒருவர், அடையாள அட்டையை நானே பிரித்து வழங்குகிறேன் என மொத்தமாக அவர் வாங்கிக்கொண்டார். அதன்படி கோயில் நிர்வாகத்துக்கு என 100 பாஸ்களை மட்டும்மே வழங்கினார். இதனால் அதிர்ச்சியான கோயில் இணை ஆணையர், துறை ஆணையரிடம் பேசினார். அவர் கலெக்டரிடம் பேச, அதன்பின் கூடுதல் பாஸ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு அடையாள அட்டை தான் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தருகிறார் என்றார்.
இப்போது இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பக்தர்களிடம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்து அமைப்பின் பிரமுகர் ஒருவர், தீபத்திருவிழா என்பது கடந்த 10 வருடங்களாக மெல்ல மெல்ல அரசு அதிகாரிகளுக்கான விழாவாக மாறிவருகிறது. கார்த்திகை தீப கொடியேற்றத்துக்கும் கோயிலுக்குள் பாதுகாப்பு என்கிற பெயரில் பக்தர்களை அனுமதிப்பதில்லை, தீபத்தன்று மகா மோசம். திரும்பிய பக்கம்மெல்லாம் போலிஸ்சும், அதிகாரிகள் அவர்களது குடும்பத்தார் தான் இருப்பார்கள். பக்தர்கள் என்பவர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு வருபவர்கள் மட்டும்மே. ஏழை பக்தர்கள் என்பவர்கள் கண்ணில் வௌக்கெண்ணெய் விட்டு தேட வேண்டி வருகிறது.
இந்நிலையில் பாஸ் வழங்குவதையும் மாவட்ட ஆட்சியரே எடுத்துக்கொண்டார் என்கிற தகவல் மூலம் குளறுபடி குறையும், பாஸ்ஸை வைத்து சம்பாதிப்பது குறையும் என்பது சந்தோஷமே. ஆனால், அந்த பாஸ்கள் அனைத்தும் தற்போது அதிகாரிகளுக்கு மட்டும் தான் போகும் என நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
தீபம் தரிசனம் காணவரும் அதிகாரிகளுக்காகவே, மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து ஹோட்டல்கள், லாட்ஜ்களில் பாதி ரூம்களை இலவசமாக வாங்கிவிடுகின்றன. ஒவ்வொரு ஹோட்டலும் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், நகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் இலவசமாக 3 வேலையும் சாப்பாடு வாங்கிவிடுகிறார்கள்.
தீபத்தை காணவரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் குடும்பத்தை அவர்கள் தங்கவைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து கோயில் கருவறை வரை பாதுகாப்பாக அழைத்து வர ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் போலிஸ், நூற்றுக்கும் அதிகமான கார்கள், ஜீப்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி வருபவர்கள் 6 மணிக்கு மகாதீபம் ஏற்றி முடித்ததும் 10 நிமிடத்தில் கோயிலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன்படியே நடக்கிறது, அவர்களுக்காகவே போலிசும் வேலை செய்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு பற்றி அவர்கள் துளியும் கவலைப்படுவதில்லை. இதற்காகவே பல கூட்டங்களை நடத்துகிறது மாவட்ட நிர்வாகம்.
தீபத்திருவிழா என்பது கட்டளைதாரர்கள், பக்தர்கள் இணைந்து நடத்துவது. கோயில் நிர்வாகத்தின் பணி, அதை ஒழுங்குப்படுத்துவது மட்டுமே. இதற்கான செலவு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களே 60 முதல் 70 சதவிதம் வரை ஏற்றுக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு சாமி தரிசனம் செய்வதில் முன்னுரிமையில்லை. அதிகார தோரணையில் வந்து சாமி தரிசனம் செய்பவர்களுக்கு கடந்த காலத்தை விட இனி அதிக முக்கியத்துவம் கிடைக்கபோகிறது. அதிகாரிகள் தங்களுக்கான விழாவாக தீபத்திருவிழாவை முற்றிலும் மாற்றிவிட்டார்கள் என்பது தற்போதைய நடைமுறைகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
மக்கள் கட்டும் வரியில் மக்களுக்கு எதிராக அரசாங்கங்கள் செயல்படுவதை போல மக்களுக்கான விழாவில் அதிகாரிகள் கோலோச்சுகிறார்கள்.