தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ நெருங்கும் நிலையில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் மருத்துவத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதைத் திட்டமிட்டுத் துரிதப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், கரோனா கண்டறியப்படும் நபருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், 12ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,587 லிருந்து அதிகரித்து 1,596 ஆகப் பதிவாகியது. இது நேற்று முன்தின எண்ணிக்கையை விடச் சற்று அதிகம். கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள் தொற்று இரண்டாம் நாளாக நேற்றும் அதிகரித்திருந்தது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,59,684 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.