கடந்த 24 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்த நிலையில் மூதாட்டி ஒருவரது உடல் ரயில்வே போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் மூதாட்டியை அடையாளம் காண ரயில்வே போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 66). இவருக்கு காந்தி, வெங்கடேசன் மற்றும் சரவணன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் காந்தி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். சரவணன் சேலை கண்டிகை கிராமத்தில் வசித்து வருகின்றார். இவருடன் இவரது தாய் சொக்கம்மாளும் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொக்கம்மாளுக்கும் அவர் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சொக்கம்மாளை தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் யாரிடமும் சொல்லாமல் மூதாட்டி அங்கு இருந்து சென்னையில் உள்ள மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தண்டவாளத்தில் கிடந்து கைப்பற்றப்பட்ட மூதாட்டி காணாமல் போன தனது தாய் சொக்கம்மாள் தான் எனக் கூறி சரவணன் உடலைப் பெற்றுக் கொண்டார். இந்த தகவலை சென்னையில் உள்ள அண்ணன்களுக்கு சொல்ல செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரால் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சரவணன் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு அவரது தாய் சொக்கம்மாள் வந்துள்ளார். இதனைக் கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சரவணன், ரயில்வே போலீசாரிடம் தனது தாய் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளது குறித்து கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதே பகுதியில் மூதாட்டி யாராவது காணாமல் பொய் உள்ளனரா என போலீசார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் செங்குன்றத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி சகுந்தலா (வயது 56) என்பவர் தாவுத்துக்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 24 ஆம் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகார் பதிவு செய்யப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சகுந்தலாவின் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்த மூதாட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்தனர். அப்போது சகுந்தலாவின் உடலில் இருந்த அங்க அடையாளங்களைப் பார்த்து சகுந்தலாதான் இது என அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சகுந்தலா இறந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.