நெல்லையை ஒட்டியுள்ள சுத்தமல்லிப் பகுதியிலிருப்பவர் சகுந்தலா. இவரது கணவர் தர்மராஜ். கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பாகவே இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் சுத்தமல்லியின் சத்யாநகரில் குடியேறியிருக்கிறார்கள்.
கணவர் தர்மராஜூடன் கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது மகன்களான பிரசாந்த் மற்றும் பிரதீப் ஆகியோருடன் வசித்து வரும் சகுந்தலா, கட்டுமானக் கூலி வேலைக்குப் போய் வருபவர். மகன்கள் இருவரும் பெயிண்டிங் தொழிலிருப்பவர்கள்.
இந்த நிலையில் கரோனா லாக்டவுன் நேரத்தின்போது பிரதீப், தன் எதிர் வீட்டிலுள்ள பெண்ணுடன் பழக்கமாகி இருவரும் காதலித்திருக்கின்றனர். அந்த விவகாரத்தில் பெண் வீட்டார் மேம்போக்கிற்காகச் சமாதானமானாலும் அவர்களின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவு செய்ததாகப் பிரதீப் போலீசால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனாலும் பெண் வீட்டாருக்கு பிரதீப் மீதான கோபம் தணியவில்லையாம். சிறை சென்ற பிரதீப், கடந்த மாதம் வெளியே வந்திருக்கிறார்.
இந்தச் சூழலில் கடந்த 03.11.2020 அன்று சுத்தமல்லிப் பகுதியிலுள்ள ஓய்வு பெற்ற ஆர்மிக்காரரின் வீட்டை உடைத்து 13 பவுன் நகை, மற்றும் லேப் டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சுத்தமல்லி போலீசார் அன்புராஜ், அருள்ராஜ் இருவரையும் விசாரணைக்காகக் கொண்டு வந்திருக்கிறார்கள். விசாரணையில் இவர்களோடு பிரதீப்பின் தொடர்பிருப்பதாகச் சொல்லி அவனைப் போலீசார் வளைக்க முற்படுகிறார்கள்.
நேற்று மாலை சகுந்தலா வீடு வந்த போலீசார், பிரதீப்பை விசாரணைக்காக இழுத்துச் செல்ல முற்பட்டபோது தன் மகனுக்கும் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி தாய் தடுத்தும், அவரைப் போலீசார் இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த சமயமே மனம் உடைந்திருக்கிறார் தாய் சகுந்தலா.
விசாரணைக்குப் பின்பு இன்று நள்ளிரவு (24.11.2020) சகுந்தலாவின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா தலைமையில் வந்த போலீசார், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், லேப்டாப்பும் இருக்கின்றன. சோதனை போட வேண்டுமென்று சொன்னவர்கள், அங்கிருந்த பிரதீப்பின் அண்ணன் பிரசாந்தை விசாரணைக்காக இழுத்தபோது கதறி அழுத தாய் சகுந்தலா, ஐயா, எம்புள்ளைகளுக்குத் தொடர்பில்லைய்யா, விட்டுறுங்கய்யா என்று அவர்களின் காலில் விழுந்து கும்பிட்டு அழுதிருக்கிறார். அப்போது தங்களைத் தடுத்த சகுந்தலாவைப் போலீசார் தாக்கியுள்ளனர். அதனைத் தடுக்க வந்த அவளது தம்பி பாலாவை நெட்டித்தள்ளிய போலீசார், பிரசாந்தை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு வர முயற்சித்த போது அவமானத்தால் நொறுங்கிப் போன சகுந்தலா, அடுத்த நொடியில் வீட்டிலுள்ள மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றித் தீ வைத்திருக்கிறார்.
நடு இரவின்போது திகு திகுவென்று பற்றிய நெருப்பையும் ஓலமெடுத்த தாயின் கதறலையும் கேட்டுப் பதறிய பிரசாந்த், அவரைக் காப்பாற்றுவதற்காக போலீசின் பிடியிலிருந்து விடுபடத் திமிறியபோது அவனை விடாமல் அமுக்கிக் கொண்டது போலீஸ். அதே நேரத்தில் அவள் தீயில் எரிவதைத் தடுத்து அவரைக் காப்பாற்றக் கூட முயற்சி செய்யவில்லையாம் இன்ஸ் குமாரி சித்ரா தலைமையிலான போலீஸார்.
இத்தனைக்குப் பிறகும் பிரசாந்த்தை போலீசார் இழுத்துச் சென்ற ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக உடம்பு முழுவதும் தீயில் வெந்து அங்கேயே கறிக்கட்டையாகியிருக்கிறார் சகுந்தலா.
பொழுது விடிந்தபோது பெண் ஒருவர் பலியான சம்பவம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. தகவலறிந்து காவல் நிலையம் வந்த மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.
சகுந்தலா தீ வைத்துக் கொண்டு பலியான சம்பவம் சத்யா நகரையே உலுக்கியெடுத்த நேரத்தில் விடிந்த பிறகே சகுந்தலாவின் வீடு வந்த போலீஸ், சடலமான அவளது உடலைப் போஸ்ட்மார்டத்திற்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஸ்பாட்டிலிருந்த சகுந்தலாவின் தம்பி பாலாவிடம் பேசிய போது. பிரதீப்பிற்கும் இந்த கேசுக்கும் சம்பந்தமில்லை. எந்த வம்புக்கும் போகாதவன். அந்தப் பெண்ணும் பிரதீப்பும் லவ் பண்ணவுக தாம். அவுக வீட்டுக்குத் தெரிஞ்சி சமாதானமாயிட்டாக. அதுலயிருந்து எந்தக் கேசுனாலும், பிரதீப்ப புடுச்சிட்டுப் போறதிலயே குறியாயிருந்தாக. போலீசு வந்து என்ன எடுத்தாங்கன்னு தெரியல. ஆனா மாரியப்பன் எஸ்.ஐ.தான் அக்காவ அடிச்சது. அவமானம் தாங்க மாட்டாம எங்கக்கா கதறுச்சு. மண்ணெண்ணய ஊத்தி தீ வைச்சுக்கிட்டு இறந்திட்டாக. என்றார் வேதனையோடு.
இவர்களின் உறவினரான சின்னமாரியோ. ஆ. ஊன்னா அவன அடிக்கிறாக. இழுத்திட்டுப் போயி கேஸ் போடுறாக. விசாரிச்சு உண்மைன்னா அடிக்கிறது தான ஞாயம். விசாரிக்காம என்ன அடி. அந்தப்புள்ளய அவம் லவ் பண்ண சம்பவத்திலருந்தே, அவங்க பேச்சக் கேட்டுகிட்டு நடக்குற போலீசு, வந்து, பிரதீப்பு பைக்க, செல்லப் புடுங்குறது கேஸ் போடுறதுமாயிருக்காக. ஒரு தலைப்பட்சமா செயல்படுதாக. என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து நாம் மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனிடம் கேட்டதில் கொள்ளைப் பொருளில் பைக் வாங்கியிருக்கிறான் 13 பவுன் நகையும் ஒரு லேப்டாப்பும் திருடு போயிருக்கிறது. லேப்டாப்பை ரெக்கவரி செய்ய வீட்டுக்குப் போலீசார் போயிருக்கிறார்கள். அவர்களது தாயே லேப்டாப்பை எடுத்துக் கொடுத்திருக்கிறார். மனதொடிந்து வீட்டினுள்ளே போனவர் மன அழுத்தத்தில் தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றார் எஸ்.பி.
பிரதீப் இப்படிக் குறிவைக்கப்படுவதற்கு காரணம், ஸ்டேஷன் போலீஸ் ஒருவருக்கும் பிரதீப்பிற்குமிடையேயுள்ள தனிப்பட்ட பகையின் உள்நோக்கம் என்ற தகவலும் றெக்கை கட்டுகிறது. அள்ளாமல் குறைவதில்லை. நெருப்பில்லாமல் புகைவதுமில்லை.