Skip to main content

தமிழக அரசுக்கு ஆளுநரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய துணிச்சல் இல்லை: திருநாவுக்கரசர்

Published on 02/07/2018 | Edited on 02/07/2018


தமிழக அரசுக்கு ஆளுநரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய துணிச்சல் இல்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளை கூட்டி கூட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் தேவையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தொடர்ந்து சட்டரீதியாகவும், அரசு ரீதியாகவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க முயற்சி செய்ய வேண்டும்.

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தமிழக உரிமையை வற்புறுத்த வேண்டும். கர்நாடக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும், பிரதமரை அனுக வேண்டும், தேவையிருந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்.

 

 

பல ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மூலமாக கிடைத்த வெற்றியை, வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாக்க, அமைக்கப்பட்ட ஆணையத்தின் மூலமாக காவிரி தண்ணீரை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஆளுநர் வி‌ஷயத்தில் கவனம் செலுத்துவதும் மக்கள் பிரச்சனை தான். அரசு செயல்பாட்டில், அரசு முடங்குகிற விதத்தில், தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முடங்குகிற விதத்தில் ஆளுநர் செயல்படுவதை எதிர்கட்சி தான் கேட்க முடியும். தற்போதுள்ள தமிழக அரசுக்கு ஆளுநரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய தைரியம், துணிச்சல் இல்லை.

ஜனநாயகத்தில் கறுப்பு கொடி காட்டுவது வெளிநடப்பு செய்வது ஒரு பகுதி. ஆளுங்கட்சியாய் இருப்பதினால் தமிழிசைக்கு அது தெரியாமல் இருக்கலாம். எதிர்கட்சியாக வரும்போது இவைகளைப் பற்றி அவருக்கு தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்