ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் காவிரிப்படுகை கூட்டமைப்பு சார்பில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி திருவாரூரில் நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல்துறையை கண்டித்தும், காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று திருவாருர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த பேரணியானது விளமல் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் திமுக அ ம முக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக வழி நெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சிறு, சிறு குழுக்களாக போராடி வந்த டெல்டா பகுதி மக்கள் இன்று ஒன்று திரண்டு பேரணியாக நடத்தி எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வெகுஜன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரசே நினைத்தாலும் இனி எங்கள் மண்ணில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கமாட்டோம்."என்கிறார்கள் கலந்துகொண்ட விவசாயிகள்.