பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு ஜாமின் மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் இளம் பெண்கள் பலரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் அதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சிறையிலிருந்து கடிதம் மூலம் ஜாமின் மனுவை திருநாவுக்கரசு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், திருநாவுக்கரசின் செல்போனில் தான் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டி திருநாவுக்கரசு ஜாமின் மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து திருநாவுக்கரசு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு 2வது நபராக சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேலும், சேலம் மத்திய சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் இந்த வழக்கில் கைதான 5 பேரும் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 5 பேரின் நீதிமன்ற காவலையும் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.