‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி வாழ் சென்னை நண்பர்கள், தேடல் மற்றும் செயல் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பலர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
“முத்துநகரம் இனி எம் மக்களுக்கு வெத்து நரகமா..?”, “நீல வானம் வேண்டும், நீ தரும் கரும் புகை வேண்டாம்” போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர்.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை ஆகும். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் மேலும் விரிவடையும் என ஆர்ப்பாட்டம் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.