விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உலக மகளிர் நாள் வாழ்த்து!:
’’உலக மக்கள் தொகையில் சரி பாதியினராக உள்ள பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் எல்லா தளங்களிலும் கிடைக்கப் பெற்று பாலின சமத்துவம் அமைய பாடுபடுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த உலக மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் பலநாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இந்தியாவில் சட்டமன்ற பாராளுமன்றங்களில் உரிய பிரதிநித்துவம் இதுவரை வழங்கப்படவில்லை. மக்களவையில் 11.8%, மாநிலங்களைவையில் 11% தான் பெண்கள் உள்ளனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்படாமல் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது இதற்கு ஒரு காரணமாகும். அடுத்து அமையப்போகும் மதச்சார்பற்ற அரசு அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடாற்றும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு மிகமிகக் குறைவாக உள்ளது. உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இதுவரை ஏழு பெண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகளில் 10% மட்டுமே பெண்கள். நீதித்துறையில் பாலின சமத்துவம் எட்டப்பட்டால்தான் பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்திய அரசியலைப்புச் சட்டம் வலியுறுத்துகிற மூன்று கோட்பாடுகளில் முதன்மையானது சமத்துவமே ஆகும். பாலின சமத்துவம் நிலைநாட்டப்படாதவரை அரசியலைப்புச் சட்டத்தை நாம் முழுமையாக நிறைவேற்றிவிட்டோம் என கூறிக்கொள்ள முடியாது.
இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு அரசியல் கட்சியும் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.’’