திராவிட இயக்கத்தின் பவளவிழா மாநாடு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திராவிட இயக்கம் தொடர்பாக, அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஆவேச உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் இன்னும் முற்றாக சாதி ஒழிந்துவிட வில்லை, தமிழாட்டில் இன்னும் முற்றாக சமத்துவம் மலர்ந்துவிட வில்லை. அதனால் பெரியாரியம் தோற்றுவிட்டது, திராவிடர் கழகம் தோற்றுவிட்டது என்று யாராவது நினைத்தால் அவர்கள் அரசியல் அறியாமையில் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். எல்லாவற்றுக்கும் ஒரு கால இடைவெளி தேவைப்படுகிறது.
ஈராயிரம் ஆண்டுகளாக சமூகத்தில் புரையோடிகிடக்கின்ற சாதி, மதம் வேறுபாடுகளை வெறும் 75 ஆண்டுகளில் ஒழித்துவிட முடியாது என்பதுதான் நாம் உணர வேண்டிய அறிவியல் உண்மை. அதற்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது. இன்னும் உழைப்பு தேவைப்படுகிறது. இதெல்லாம் நிறைவேறவில்லையே என்று திராவிட கழகத்தின் மீது நாம் விமர்சனம் வைக்க முடியாது. அப்படி யாராவது விமர்சனம் வைத்தால் அவர்களின் புரிதலில் தவறு இருக்கிறதே அன்றி, அது நிஜத்தில் உண்மை அல்ல. தந்தை பெரியார் தோன்றிருக்காவிட்டால், திராவிடர் கழகம் இல்லாமல் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். பெரியார் மட்டும் பதவியாசை பிடித்தவராக இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியிலே நீடித்திருக்க முடியும்.
அப்படி அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்திருந்தால் அடைய முடியாத பதவியை எல்லாம் அவரால் அடைந்திருக்க முடியும். தொடமுடியாத உச்சத்தை எல்லாம் தொட்டிருக்க முடியும். அதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி அப்போது மேல்நோக்கி வளர்ந்து கொண்டிருந்த காலம். எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் வளர்ந்துகொண்டிருந்த நிலையில், பதவிதான் முக்கியம் என்று பெரியார் நினைத்திருந்தால், காமராஜர் போல தமிழகத்தின் முதலமைச்சராக வந்திருக்க முடியும். பெரியார் மறைந்த போது இனி திராவிடர் கழகம் அவ்வளவுதான் என்று பலர் மகிழ்ச்சியுற்றார்கள்.அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
அடுத்து அவரின் கொள்கைகளை வீரியத்தோடு பரப்பினார் பேரறிஞர் அண்ணா. அவர் மறைந்து போனால் திராவிடம் அவ்வளவுதான் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கலைஞர். அவர்களின் எண்ணங்களை தவிடிபொடியாக்கினார். இன்று அவர்கள் மூவரும் இல்லை. ஆனால், திராவிட இயக்க கொள்கை இன்றும் உயிர்போடுதான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் இந்த சமூகத்தில் ஊடுறுவி இருப்பதால்தான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதனை அழிக்க முடியாது. நீர்த்துப்போக செய்ய முடியாது" என்றார்.