திமுக தலைவராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 49ஆண்டுகளை முடித்து, இன்று (சூலை 27) 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் தலைவர் கலைஞர். இது இந்திய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒரு மகத்தான சாதனையே ஆகும். இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ள தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 27.07.1969 அன்று திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள், கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அக்கட்சியை எத்தனையோ அரசியல் சூறாவளிகளுக்கு இடையில், இரண்டு பிளவுகளைச் சந்தித்த நிலையிலும் கட்டுக்கோப்பு குலையாமல், சிதையாமல் இன்றுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திவரும் பெருமைக்குரியவராக விளங்குகிறார்.
ஒரு கட்சியைத் தலைமையேற்று வழிநடத்தும்போது கூர்மையாகக் கவனிக்கவேண்டிய முக்கியமான கூறுகள் இரண்டு உள்ளன. முதலாவது, அக்கட்சியின் உட்கட்சி சனநாயகம்! இரண்டாவது, அக்கட்சியில் அனைத்துத் தரப்பினருக்கும் அளிக்கப்படும் பிரதிநிதித்துவம்! இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலேயே, உட்கட்சித் தேர்தலை நடத்திப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் ஒரே கட்சியாக திமுக மட்டுமே விளங்குகிறது. தேசிய கட்சிகள்கூட நியமனப் பொறுப்புகளை பின்பற்றிவரும் நிலையில், இது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.
அத்துடன், திமுகவின் அதிகாரப் பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினர், மகளிர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் போற்றுதலுக்குரியதாகும். துணைபொதுச்செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர் போன்ற பொறுப்புகளில் தலித் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு, பிற கட்சிகளில் பின்பற்றப்படாத ஒரு புரட்சிகர சனநாயக நடவடிக்கையாகும்.
ஒரு அரசியல் கட்சி ஆட்சியதிகாரத்திற்கு வரும்போதும் அதனுடைய போர்க்குணத்தைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகும். திமுக, ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட அவசர நிலையை எதிர்த்து குரல்கொடுத்து பதவி பெரிதல்ல; கொள்கையே பெரிதென்று நிலைநாட்டியவர் தலைவர் கலைஞர் ஆவார். தலைவர் கலைஞரைப்போல தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான தலைவர் வேறு எவரும் இருக்கமுடியாது. அதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த கொள்கையின்மீது அவர் காட்டிய உறுதிதான்.
திமுகவின் தலைவராக கலைஞர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அக்கட்சியின் முன்னணித் தவைர்களுக்கும், தொண்டர்களுக்கும் மட்டுமல்ல; இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் பாடமாகும். இத்தகைய பெருமைக்குரிய வரலாற்று நாயகர், உலகச் சாதனையாளர் தலைவர் கலைஞர் நீடு வாழ்கவென இத்தருணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்!