திருச்சி கேகே நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜா (எ) அழகர்சாமி விடுதலை சிறுத்தைகள் வணிகர் அணி மாநில துணைச் செயலாளர். இவரது தம்பி ரமேஷ்குமார் கட்சியின் அச்சு ஊடக மைய மாநில துணைச்செயலாளராக உள்ளார். இருவரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இரவு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அழகர்சாமி காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது 2 கார்களில் வந்த 7 பேர் கும்பல் காரை வழிமறித்து அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி அவர்களது காரில் அழகர்சாமியை கடத்திச் சென்றனர். மேலும் அவரிடமிடிருந்து ரூ.4 லட்சம் பணம், 18 பவுன் நகைகளை பறித்தனர். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சென்றதும் ரூ.1 கோடி கேட்டு மிரட்டினர்.
அவர் பணம் தர மறுத்துவிட்டார். பின்னர் பேரம் பேசியதில் ரூ. 40 லட்சம் தருவதற்கு அழகர்சாமி ஒத்துக்கொண்டதும் கும்பலை சேர்ந்தவர்கள் அழகர்சாமியை கீழே இறக்கி விட்டு விட்டு அவரின் காரிலேயே தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த அழகர்சாமியின் தம்பி ரமேஷ் குமார் வேறு காரில் சென்று அழகர்சாமியை கே.கே. நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
அங்கு அளித்த புகாரில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அசோக் மற்றும் பட்டாசு ராஜா ஆகிய இருவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், ஏற்கனவே அழகர்சாமியுடன் இணைந்து தொழில் புரிந்து வந்த இருவரும் தற்போது விலகிச் சென்றுவிட்டனர்.
கடந்த வாரம் அழகர்சாமியை இருவரும் மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார். வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வேல்முருகன் திருச்சி ஜீவாநகர் ராஜா என்கிற ராஜேந்திரன் (31),ரங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் (29), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பெருமாள்கோயில்தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் (29) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார். மேலும் பட்டாசு ராஜா சாமி ரவி அசோக் செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
இதில் சாமி ரவி என்கிற ரவுடி தமிழத்தில் மிக முக்கியமான ரவுடி பணத்திற்காக ஆட்களை கொலை செய்த வழக்கிலும், ராமஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்டவர். பிரபல ரவடி முட்டை ரவி குழுவில் இருந்தவர் சாமிரவி என்பதால் அதே தொடர்புகளை வைத்தே தமிழகம் முழுவதும் பெரிய நெட்ஒர்க் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவரை தேடுவதற்கு சிபிசிஐடியில் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஆனாலும் ஆளும் கட்சியின் மேலிடத்தோடு மிக நெருக்கமாக இருப்பதால் போலிசால் இவரை நெருங்க முடியவில்லை.
தற்போது ஒரு வழக்கறிஞர் உதவியுடன் சாமிரவி எடுத்த பணத்தை கொடுத்து விடுவதாகவும், வழக்கை வாபஸ் வாங்கும் படி பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.