திருச்செந்தூரில் பேரிகார்டு இழுக்கும் சத்தம் கேட்டு கோவில் யானை மிரண்ட சம்பவம் கோவில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதன் காரணமாக வழக்கம்போல் 6 கிலோ பச்சரிசி, 2 கிலோ விபூதி இரண்டையும் கலந்து பூசப்பட்டு கோயில் யானை வெள்ளை நிறமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பூஜைகளும் முடிந்த நிலையில் கோயிலை விட்டு யானை வெளியேறியது. அந்த நேரத்தில் கோவிலில் பணியிலிருந்த பாதுகாவலர் ஒருவர் இரும்பு தடுப்பை ( பேரிகார்டு) இழுத்தார். இதனால் 'கீர்....' என சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு எரிச்சலடைந்த யானை திடீரென பக்தர்கள் கூட்டத்தில் சடாரென திரும்பியது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் கோவில் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யானைப்பாகன் யானையை சமாளித்து அங்கிருந்து அழைத்துச் சென்றார்.