கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள நத்தாமூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுதா(48). இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, தனது இரு பெண் பிள்ளைகளையும் கூலி வேலை பார்த்து படிக்க வைத்து வருகிறார். இதனிடையே ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டியும் வருகிறார். மேலும், மகள்களின் திருமணத்திற்காக கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 13 சவரன் நகைகளைச் சேமித்து வைத்திருந்தார். சுதா தினசரி கூலி வேலைக்கு செல்வதும், அதன் பிறகு ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வதுமாக இருக்கிறார். பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர்.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கூலி வேலை கிடைக்காததால் அன்று முழு நேரம் ஆடுகளை மேய்ப்பதற்காகக் காட்டுப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் ஆடுகளுடன் வீடு திரும்பிய சுதா பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கூரை வீட்டின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் அவர் சேமித்து வைத்திருந்த 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். பதறிப்போன சுதா இதுகுறித்து திருநாவலூர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தத் தகவல் அப்பகுதி எங்கும் பரவியது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு சுதா ஆடுகளை மேய்க்க ஓட்டிச் செல்வதற்காக கொட்டகைக்கு உள்ளே சென்றார். அப்போது, வீட்டுக்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து 13 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள், அந்த நகைகளை மீண்டும் வந்து ஆட்டுக்கொட்டகையில் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அதை எடுத்து சரிபார்த்த போது அதில் அரை சவரன் மட்டும் குறைந்திருந்தது. இருப்பினும், போலீசார் அந்தக் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.