தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சென்ற மாதம் 27மற்றும் 31ம் தேதி இருகட்டங்களாக நடந்தது. பல மாவட்டங்களில் ஆளும் அ.தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகமாக செயல்பட்டனர் என்றும், இந்த செயல்களை கண்டித்தும், விதிமுறைகளை மீறி அரசு ஊழியர்கள் நேர்மையாக பணி செய்ய முடியாத அளவுக்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட கூறி மிரட்டியவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, அந்நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 13.01.2020 திங்கள்கிழமை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழகம் முழுக்க பணியில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை பணிக்கு வந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகளை மிரட்டிய, நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுத்த நபர்களை கைது செய்... என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலும் முறைகேடாகத் தான் நடந்தது என்பதற்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களே சாட்சியாக தங்கள் கண்டனத்தை கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்பாட்டம் நடத்தியும் பதிவு செய்துள்ளார்கள்.