“இதுவரைக்கும் 99 தடவ ஜெயிலுக்குப் போயிருக்கேன். இன்னைக்கு 100வது தடவ ஜெயிலுக்கு போகப்போறேன்” என திருட்டு தொழிலில் கொடி கட்டிப் பறந்த கோவை ஆசாமியின் வாக்குமூலம் போலீசாரை கதிகலங்க வைத்துள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபீர் அகமது. 42 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சபீர் அகமது கடந்த 14 ஆம் தேதியன்று குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதிக்கு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர் சபீர் அகமதின் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சபீர் அகமது, பஸ்சை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டுள்ளார். அப்போது, அதே இடத்தில மாற்று உடையில் நின்றுகொண்டிருந்த சிறப்பு தனிப்படை போலீசார், அந்த செல்போன் திருடனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் சொன்ன தகவல், போலீசாரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. போலீசாரிடம் சிக்கிய அந்த நபரின் பெயர் ஆறுமுகம் என்கிற போண்டா ஆறுமுகம். 55 வயதான இவர், இதுவரை எந்த வேலைக்கும் சென்றதில்லை. திருடுவது மட்டும்தான் அவரது தொழிலாக இருந்து வந்தது. ஆறுமுகம், தனது 14 வயதில் திருடத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் முதல்முதலில் போண்டா திருடியதால் இவரை போண்டா ஆறுமுகம் என அழைத்து வந்துள்ளனர். நாளடைவில் அதையே அடைமொழியாக வைத்துக்கொண்டார்.
இவர், கூட்டமாக இருக்கும் பகுதியில் திருடுவதைத்தான் வழக்கமாக வைத்துள்ளார். மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எது கிடைத்தாலும் திருடுவாராம். மேலும் திருடிய பணத்தில் பெண், மது, கஞ்சா என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆறுமுகம், கடந்த 39 வருடங்களாக திருட்டு தொழிலை செய்து வந்த நிலையில், இதுவரை 99 முறை சிறைக்குச் சென்றுள்ளார். இன்று 100-வது முறையாக சிறைக்குச் செல்ல உள்ளேன் என சிரித்துக்கொண்டே பேசியுள்ளார். இதைக்கேட்டு அரண்டுபோன போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காக்கி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.