
நாளை மதுரையில் அதிமுக மாநாட்டு நடக்க உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகமானோரை மாநாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து ஊர்களிலும் வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முகூர்த்த நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு கல்யாண நிகழ்ச்சிகளுக்குக் கூட வேன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மாநாடு முன் ஏற்பாடுகளில் மாஜி அமைச்சரும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளருமான விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தீவிரம் காட்டி வருகிறார். மாநாட்டுக்குத் தொண்டர்கள் செல்லும் போது உணவு, நடுவழியில் பஞ்சரானால் உடனே சரி செய்ய நடமாடும் பஞ்சர் ஒட்டும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநாட்டுப் பந்தலில் நடக்கும் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை வைத்து கண்காணித்து வருகிறார்.
கந்தர்வக்கோட்டை மாஜி எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம், அன்னவாசல் ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் கவுன்சிலருமான சாம்பசிவம் உள்பட பலர் நேற்று இரவு வரை மாநாடு முன் ஏற்பாடு பணிகளை பார்த்துவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பும் போது தாவுது மில் நிறுத்தத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

ஒன்றியச் செயலாளர் தனது ஊரானா மருதாந்தலை செல்ல தனது மகனை வரச் சொல்லி இருந்த நிலையில், முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே இறங்கி தனது மகன் காரோடு நின்ற பக்கம் சாலையை கடந்த போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக சென்ற கார் சாம்பசிவத்தை அடித்து தூக்கி வீசியது. இதில் சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் மரணமடைந்த ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளனூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. மாநாடு முன் ஏற்பாடு பணிகளை கவனித்து விட்டு வந்து விபத்தில் பலியான ஒன்றியச் செயலாளர் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.வினர் உடைந்து போய் உள்ளனர்.