Skip to main content

போலீசுக்கே போனஸ்;அழும் கொள்ளையர்கள்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறீங்களே சார்?” என்று நண்பர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் சொல்லியிருக்கிறார்.  அவரோ “நான் சொல்லுறதெல்லாம் சரிதான். இது தீபாவளி நேரம். போலீஸுக்கு அவனுங்க போனஸ் போடணும்ல. அதான்.. வேகவேகமா பூட்டியிருக்கிற வீடுகள்ல நகையும் பணமும் கொள்ளை போகுது.” என்று சிரித்திருக்கிறார். நேர்மையான அந்த அதிகாரி பொய் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் “அப்படின்னா.. போலீஸ்காரங்க யாருகிட்ட போனஸ் வாங்குறாங்க? உங்க சிரிப்புக்கு அர்த்தம் புரியல..” என்று நண்பர் துளைத்தெடுக்க..  “இன்னுமா விளங்கவில்லை? யூனிபார்முக்கு இருக்கிற மரியாதையைக் கழற்றி வைத்துவிட்டு, சில போலீஸ்காரர்கள் பலே திருடர்களிடமும், கொள்ளைக்காரர்களிடமும் மாமூல் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தீபாவளி போனஸும் வாங்குகிறார்கள். இதெல்லாம்.. காவல்துறை மட்டத்தில் சாதாரணமா நடக்கிறதுதான்.” என்றிருக்கிறார்.

அந்தக் காவல்துறை அதிகாரி அப்படி பேசியதன் பின்னணி இது -  


 

 Thief and Diwali Bonus ..

 

அமமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார் விருதுநகர் மாவட்டம் – கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சந்தோஷ்குமார். இவர்,  இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, பரமக்குடியிலுள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு சந்தோஷ்குமாருக்குத் தகவல் தெரிவித்தனர். வீட்டில் வைத்திருந்த 85 பவுன் நகைகளும் ரூ.5.45 லட்சம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது. கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் நெல் வியாபாரி முருகன், இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நாயுடு தெருவிலுள்ள அவருடைய வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. 40 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.
 

 Thief and Diwali Bonus ..

 

“ஒரே இரவில் ஒரே தாலுகாவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? தீபாவளி நெருங்கி விட்டதல்லவா? திருடர்களும் பிசியாகிவிட்டனர். பக்கத்து தாலுகாவிலுள்ள சேத்தூரிலும், திருடன் ஒருவன் நள்ளிரவில் வீடு புகுந்து சிவசக்தி என்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். விருதுநகர் மாவட்டத்தில்தான் இந்த மூன்று சம்பவங்களும் நடந்திருக்கின்றன.” என்று நண்பரிடம் கண் சிமிட்டினாராம் அந்த அதிகாரி.

 

 Thief and Diwali Bonus ..

 

போலீஸ்காரர்கள் சிலர் திருடர்களிடம் எப்படி போனஸ் வாங்குகிறார்களாம்?
 

“டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் போன்றவர்கள் நேரடியாக திருடர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கான்ஸ்டபிள் லெவலில் உள்ளவர்கள்தான் போன் தொடர்பில் இருப்பார்கள். பின்னாளில், மாமூலோ, போனஸோ வாங்கிய விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டாலும், மாட்டுவது கான்ஸ்டபிள்கள்தான். அதிகாரிகள் தப்பித்துவிடுவார்கள். திருடனின் வெயிட்டைப் பொறுத்து போனஸ் கறக்கப்பட்டுவிடும். சின்ன லெவலில் இருந்து, அதாவது ஜவுளிக்கடையில் துணி எடுப்பது போலீஸ்காரர்கள் என்றால், பில்லுக்குப் பணம் செலுத்துவது திருடர்களாக இருப்பர். பெரிய லெவல் என்றால், நகைக்கடையில் போலீஸ்காரர்கள்  வாங்கும் நகைகளுக்கு திருடர்கள் பில் செட்டில் செய்வது விடுவார்கள். போனஸை பணமாக வாங்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப லோ லெவல்..” என்று நம்மிடம் திரியைப் பற்ற வைத்தது ஒரு கான்ஸ்டபிள்தான்.

 

 Thief and Diwali Bonus...

 

திருடன் – போலீஸ் விளையாட்டு சின்ன வயதிலிருந்தே நாம் ஆடி வருவதுதான்! திருடனும் தீபாவளி போனஸும் பலரும் அறிந்திடாத சங்கதியாக உள்ளது. அப்புறம் இன்னொரு விஷயம்.. மேற்கண்ட கொள்ளைகளுக்கும் அந்த லிமிட்டிலுள்ள காவல்துறையினருக்கும் ‘முடிச்சு’ போட்டு விடாதீர்கள்!  

 

 

சார்ந்த செய்திகள்