மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புத்தர வேண்டும் என 'வாக்காளர் பட்டியல் பார்வையாளர்' சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (30.12.2020) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், " 'வாக்காளர் பட்டியல்-2021' ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் 1,500 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடியாக மாற்றப்படும்" என்று கூறினார்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். இதற்கு அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கக்கூடாது எனும் கருத்தைப் பதிவு செய்தனர் .
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஜி தாமஸ் வைத்தியன் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடித்து அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சியினரும் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.