வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.சுரேஷ்குமார் இருந்துவந்தார். பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றிய தலைவர் ஜி.கே.ஜலபதி, பிசிசி உறுப்பினர்கள் ஜே.கிருஷ்ணவேணி, ஆர்.தேவகிராணி ஆகியோர் பதவியில் இருந்துவந்தனர். இவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார்கள், முகநூல், வாட்ஸ்அப்களில் கட்சி தலைமைப்பற்றி விமர்சனம் செய்து தகவல்களை பரப்புகிறார்கள். பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்துக்கொண்டு உள்ளுர் பிரச்சனை எனச்சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களின் போராட்டம் முஸ்லிம், கிருஸ்த்துவ மக்களிடம் காங்கிரஸ் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் கட்சி விரோத செயல்படும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் எனக்கூறி அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி வேலூர் மத்திய மாவட்ட தலைவர் ஜெ.ஜோதி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்களை நீக்கியதோடு, அந்த இடத்துக்கு புதியதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
கட்சி தேர்தல் நடந்தபோது, கட்சியில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று தேர்வான எங்களை நீங்க மாவட்ட தலைவருக்கு அதிகாரம் கிடையாது. எங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாநில தலைவர் மற்றும் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கே அதிகாரம் உள்ளது எனச்சொல்லும் பாதிக்கப்பட்டவர்கள், இதுப்பற்றி மாநில தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளோம் என்கிறார்கள். மாநில தலைவர் அறிவிக்கும் வரை நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து யாரும் எங்களை நீக்க முடியாது என்கிறார்கள்.
அமைச்சர் வீரமணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை, பேரணாம்பட்டு பகுதியில் பேசுகிறோம், போராடுகிறோம் என்பதால் எங்களை முடக்க அமைச்சர் தரப்பின் பேச்சை கேட்டுக்கொண்டு, எங்களை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார் என குற்றம்சாட்டுகிறார்கள்.