'பெரியசாமியும், சட்டமன்ற உறுப்பினர்களும் லண்டனில் திறந்து வைத்த பென்னிகுவிக் சிலை இன்று என்ன நிலையில் இருக்கிறது பார்த்தீர்களா?' என அதிமுகவின் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
இன்று நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''அதிமுகவின் ஒரே எதிரி யார் என்றால் திமுக தான். அந்த திமுகவை ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது என்றார் எம்ஜிஆர். இந்த இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கிய போது, ‘அவரின் படத்திற்கு கேரண்டி உண்டு; எம்ஜிஆர் உருவாக்கிய இந்த கட்சிக்கு கேரண்டி கிடையாது. இவர்கள் விசில் அடிச்சான் குஞ்சுகள்’ என்று கேலி பேசியவர்தான் கலைஞர். அதே கலைஞரை 11 ஆண்டுக் காலம் வனவாசம் போக வைத்தது அதிமுக படை,எம்ஜிஆரின் படை.
அரிதாரம் பூசியவர்கள் அரசியல் செய்ய முடியுமா? சினிமா நடிகர் அரசியல் பண்ண முடியுமா? இது என்ன கால்சீட்டா என்று கேலி பேசியவர் கலைஞர். அவரை கோட்டை பக்கமே வர முடியாமல் செய்தவர் எம்ஜிஆர். வெள்ளையனே வெளியேறு எனப் போராட்டம் நடத்திய நாடு தமிழ்நாடு. அந்த தமிழ்நாட்டில் ஒரு வெள்ளையன் மட்டும் ஈர உணர்வு கொண்டவனாக இருந்திருக்கிறான் என்பதற்கு உதாரணம் தான் ஜான் பென்னிகுவிக்.
ஜான் பென்னிகுவிக் மட்டும் மதுரை மாவட்டத்திற்குப் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் தேனி மாவட்டமே இந்த செல்வாக்கோடு இருக்காது. ஐந்து மாவட்ட விவசாயிகள், ஐந்து மாவட்ட மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு இருப்பார்கள். திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த மக்கள் எல்லாம் குடிநீர் குடிக்கிறார்கள் விவசாயம் பண்ணுகிறார்கள் என்றால் ஜான் பென்னிகுவிக் தான் காரணம். ஜெயலலிதா அவருக்கு மணிமண்டபம் அமைத்து அவருக்கு பெருமை சேர்த்தார்.
அதே மாதிரி தானும் பெருமை சேர்க்க வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருந்து ஒரு அமைச்சர், தன்னுடைய மாவட்டத்தினுடைய எம்எல்ஏக்கள் எல்லாம் சேர்ந்து லண்டனில் ஜான் பென்னிகுவிக்கிற்கு சிலை வைத்தார்கள். அந்த சிலை இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறது. இந்த ஆட்சியில் அந்த சிலை மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் ஐ.பெரியசாமியும், சட்டமன்ற உறுப்பினர்களும் சிலையைத் திறந்து வைத்து போஸ் கொடுத்துவிட்டு வந்தார்கள். ஆனால் இன்று அந்த சிலை அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது'' என்றார்.