திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டு நாட்கள் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இன்று காணொளி காட்சி வாயிலாக மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இரண்டு நாட்களில் மாநாடு நிறைவடைந்தாலும் ஒரு வாரம் வரை மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன், ''முத்தமிழ் முருகன் மாநாடு என்பது ஓட்டுக்கான ஒரு உத்தி இது. ஓட்டுக்காக எதையும் இவர்கள் செய்வார்கள். எங்காவது சிறுபான்மையினருக்கான மாநாடு என்றால் அதை முதல்வர் தொடங்கி வைப்பாரா? ஆன்மீகத்தை கையில் எடுக்கவில்லை என்றால் 2026 சட்டமன்றத் தேர்தல் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் தான் தற்பொழுது திமுக முருகனை கையில் எடுத்துள்ளது. அண்ணாவின் தமிழை பின்பற்றிய இவர்கள் தற்பொழுது ஆண்டாளின் தமிழையும் பின்பற்றுகிறார்கள். சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட ஆன்மீகத்தை பேசாமல் அரசியல் செய்ய முடியாது. ஓட்டுக்காக இல்லாமல் நாட்டுக்காக இருக்கும் முருக பக்தர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மலரா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.