தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர். இந்நிலையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (19.07.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அரசு துறையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உச்சத்தில் இருக்கும் போது அரசு சார்பில் செல்லக்கூடிய மின்சாரம் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான். 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவையில் வெறும் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.
மீதம் உள்ள 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்றால் காசு, பணம், துட்டு, மணி, மணி. அரசுத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் சராசரியாக 3.40 ரூபாய் தேவைப்படும். ஆனால் உச்சப்பட்ச மின் தேவை உள்ள நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.