கடந்த ஆண்டு ஜூலை 2-ந்தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில், முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை கத்தியால் கொடூரமாக தாக்கினான் ரவுடி ஆனந்த். இந்த சம்பவம் நிகழ்ந்த 48 மணிநேரத்தில் ஆனந்த்தை என்கவுன்டர் செய்தது சிட்டி போலீஸ். ஆனந்தை பிடிக்க முயன்ற தனிப்படை போலீஸாரை தாக்க முயன்றதால், வேறு வழியில்லாமல் தற்காப்புக்கு சுட்டதாக விளக்கம் அளித்தது சென்னை காவல் துறை.
இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தின் முதலாமாண்டு நினைவு தினம் என்பதால், அவனது நண்பர்கள் 'டிக்டாக்' வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மயிலாப்பூர் கைலாசபுரம் இடுகாட்டின் பின்னணியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என கானா பாடல் பாடி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, வீடியோவில் இடம்பெற்ற சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா என 6 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளனர். வழக்கமாக இதுபோன்ற குற்றவாளிகள் கைதுஆகும் போது, மறுநாள் கையில் 'மாவுக்கட்டுடன்' புகைப்படம் வெளியாகும். விசாரிக்கும்போது காவல் நிலையத்தின் பாத்ரூமில் 'வழுக்கி' விழுந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படும்.
ஆனால், இந்த 6 பேருக்கும் மாவுக்கட்டு போடவில்லை. அதற்கு பதிலாக, போலீஸை வாழ்த்தி கானாபாட்டு பாடச் சொல்லி வித்தியாசமாக ட்ரீட் பண்ணி உள்ளனர் ராயப்பேட்டை போலீஸார். இதன்படி 6 பேரும் கோரஸாக பாடிய வாழ்த்து பாட்டில் "போலீஸார் எல்லாம் நம் நண்பர்கள்... அவர்கள் இல்லாவிட்டால் ஊரே சுடுகாடாகும்" என்று வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.
ஆக... மரண பயத்தை காட்டிவிட்டார்கள் போல...வித்தியாசமாக இருக்குது சென்னை சிட்டி போலீஸின் அணுகுமுறை!