புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசன விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று நாகுடி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கல்லணை கால்வாய் கரையில் 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் விவசாயிகளுடன் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இன்று(25.8.2018) 4 வது நாள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டக் களத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சு.இருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல கட்சி பொறுப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
நாகுடி பகுதிக்கு தினசரி 300 கன அடி தண்ணீர் வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். அதன் பிறகு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாலையில் சென்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நாளை முதல் 250 கன அடி வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகுடி பகுதிக்கு 250 கன அடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதால் பல பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் போராட்டம் அதிகாரிகளை பணிய வைத்துள்ளது என்கின்றனர் விவசாயிகள்.