அண்மையாக நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நாடு முழுவதும் அனல் மின் நிலையம் உள்ளிட்ட தேவைகளுக்கான நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சிமெண்ட் தயாரிப்பிற்காக நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் சிமெண்ட் (50 கிலோ மூட்டை) உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கக்கூடும் என அறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகத் தமிழகத்தில் ஒரு நொடி மின்வெட்டு கூட இருக்காது என விளக்கமளித்துள்ளார். ''தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது. தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்துகொண்டிருக்கிறது. கையிருப்பில் இருக்கும் நிலக்கரியை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப ஒன்றிய அரசு பிரித்து வழங்கி வருகிறது. எந்த நிலையிலும் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்'' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.