வாக்காளர்களின் வாக்குகளை வேட்டையாட ஒவ்வொரு வரும் வித்தியாசமான டெக்னிக்குகளை கையாண்டு வருகிறார்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. தங்கள் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கு பணம் என்பதிலிருந்து பரிசு பொருட்கள் வரை அனைத்தும் தாராளமாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு வித்தியாசமாக தங்களது வேட்பாளரை வெற்றிபெற வைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் செய்த வேலைதான் இது...
ஈரோடு மாவட்டம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் 5 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் செந்தில்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் மக்கள் ஜி, ராஜன் அந்த ஐந்தாவது வார்டுக்குட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தெருவோரம் இருந்த ஒரு தேநீர் கடையில் உடன் வந்தவர்களையும் தேநீர் குடிக்க வைத்துவிட்டு அங்கு போண்டா பஜ்ஜி போட்ட நபரிடம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என மக்கள் ஜி ராஜன் கேட்டபோது, அந்த ஊழியர் விளையாட்டாக பெரிய பெரிய தலைவர்கள் டீ கடைக்கு சென்றால் டீ போடுகிறார்கள் அந்தந்த பகுதியில் உள்ள தொழில்களை செய்து காட்டுகிறார்கள் நீங்கள் உங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்கறீங்க சரி ஒரு பத்து நிமிடம் போண்டா பஜ்ஜிக்கு மாவு பிணைந்து பஜ்ஜி, போண்டா போட்டுக் கொடுங்கள் என்றார்.
அதைக் கேட்ட மக்கள் ராஜன் உடனடியாக கண்டிப்பாக செய்கிறேன் என்று களத்தில் இறங்கினார். சுமார் 20 நிமிடம் போண்டா, பஜ்ஜிக்கு மாவு பிணைந்து போட்டு தயாரித்து அதை உடன் வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து சாப்பிட வைத்தார்.
காங்கிரஸ் தலைவரிடம் நீங்க போண்டா பஜ்ஜி மொத்தம் 100 போட்டிருக்கிறீர்கள் அந்த நூறு போண்டா பஜ்ஜியையும் உடன் வந்த உங்க கட்சிக்காரர்கள் சாப்பிட்டு விட்டார்கள் ஒரு போண்டா வுக்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில் 500 ரூபாய், டீ குடித்ததுக்கு 500 ரூபாய் மொத்தம்ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என கூற அடடடடா பணம் கொடுக்கவில்லையா? என்று கூறிய பிறகு அவரே பணத்தை எடுத்துக் கொடுத்து அந்த ஊழியரிடம் தட்டிக் கொடுத்தார். அப்போது இந்த காட்சியை கண்ட பொதுமக்களும் விநோதமாய் பார்த்து மகிழ்ந்தனர்.