காட்டுமன்னார்கோவில் அருகே கொளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் கொளக்குடி கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் உள்ள சாலையின் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த பொது வழியாகச் செல்கின்றனர்.
இந்நிலையில் பொதுவழிச்சாலையை அதேபகுதியில் உள்ள தனிநபர் ஒருவருக்கு சொந்தம் எனக்கூறி வியாழக்கிழமை முள் வேலி போட்டு அடைத்துள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவலளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் , காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வேலியைப் பிரித்து தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.