தமிழகத்தில் மொழிக் கொள்கைகள் தொடர்பான பேச்சுக்கள், வாதங்கள் கிளம்பியிருக்கும் நிலையில், அண்மையில் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'இந்தி மொழியை விருப்பப்பட்டு கற்றுக் கொள்வது தவறல்ல. ஆனால் இந்தி மொழியை திணிப்பதுதான் தவறு' எனக் கூறியிருந்தார். அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 'இந்தி மொழி யார் மீதும் திணிக்கப்படாது' என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'ஆன்மீகமும் தமிழும் சேர்ந்து தான் நமது தமிழ் மக்களை உயர்த்தக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆன்மிகத்தை விடுத்து தமிழ் கிடையாது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டுள்ளேன். தமிழக மக்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. ஆன்மீக தமிழே இல்லை, ஆன்மீகம் இல்லாத தமிழ் வளர்ச்சி தான் மொழி வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டு சிலர் முயற்சி செய்கிறார்கள். அது அப்படி இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆண்டாள் இல்லாமல் தமிழ் இல்லை. இன்றைக்கு இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா என்ற மிகப் பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஜிப்மரில் கூட கட்டாயப்படுத்தி யாருக்கும் சர்க்குலர் போடவில்லை. பலகைகள் எல்லாம் தமிழில் தான் இருக்கும். அதை நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். ஆனால் எனக்கு இருக்கும் கவலை என்னவென்றால் நமது மொழியை நாம் சில நேரம் முழுமையாக படிக்க மாட்டோம். நமது மொழியை முழுமையாக படிக்கவேண்டும், கூட ஒரு மொழியை படித்துக் கொண்டால் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த மொழி பேசுபவர்களை ரொம்ப மோசமாகப் பேசுவது, அவர்கள் செய்கிற தொழிலைக் குறைவாக பேசுவது. இதெல்லாம் நமது கலாச்சாரத்திற்கு அழகில்லை'' என்றார்.