Skip to main content

சம்பள பாக்கி வழங்காததை கண்டித்து கஞ்சி காய்ச்சும் போராட்டம்! 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இறையூரில் அம்பிகா சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையானது விவசாயிகளுக்கான கரும்பு நிலுவை தொகை, வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல வருடங்களாக இயங்காமல் உள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 12 மாதங்களுக்கும் மேலாக சம்பள பாக்கி தராமல் காலந் தாழ்த்தி வருகிறது. 
 

Protest


 

மேலும் இந்நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் ஆலை வளாகத்தில் வசித்து வந்த நிலையில், மின்சார பாக்கி தொகையை செலுத்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதினால் இருளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் மட்டுமில்லாமல் குடிநீருக்காக மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லாததால், இறையூர் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆலையின் முன்பு கஞ்சி களைய போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 

இப்போராட்டத்தில் ஆலை நிர்வாக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வேளை பசியாற கிராம பொதுமக்கள் சார்பில் சோற்று கஞ்சி காய்ச்சி  கொடுக்கப்பட்டது. மேலும் இப்போராட்டத்தில் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசுடைமையாக்க வேண்டும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்கி அவர்களின் வாழ்வாதத்தை காத்திட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தினந்தோறும் ஆலை ஊழியர்களுக்கு ஒரு வேளை உணவு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்