நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்சி சுரங்கம் 1Aவில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நாட்களை குறைத்து பணியிட மாற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பணிநாட்கள் நீட்டிக்கவும், அவர்கள் பணிபுரிந்த இடத்திலே பணிவழங்க கோரியும் பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் விரக்திக்குள்ளாகியிருந்த 25 தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1A முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர்.
அவர்களில் ஜோசப், ஜெயராஜ், குமார், திருவள்ளுவன், பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் விஷம் குடிக்க முயற்சித்த மற்றவர்களின் முயற்சி தடுக்கப்பட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இந்த 25 பேரும் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலத்தை வழங்கியதால், ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்றும், ஆனால் உரிய மரியாதை கொடுக்காமல் நிர்வாகம் இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால் விரக்தி அடைந்தததாகவும் கூறப்படுகிறது.