கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே கடந்த 3 ஆம் தேதி ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மற்றொரு மாணவன் அமிலம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் இரு சிறுநீரகமும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவனின் உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்திருந்தனர். தன் மகனுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதாக குற்றம் சாட்டிய பெற்றோர் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இறந்த மாணவனின் தந்தை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது மகன் கடந்த 17ம் தேதி 3.51 மணியளவில் இறந்துவிட்டார். காவல் அதிகாரிகள் வந்து விசாரித்தனர். பிரேத பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளான். மகனை எடுத்துக்கொண்டு வர வேண்டி கேட்டார்கள். அவர்களிடம் நான் சொன்னேன். எனக்கு நியாயம் வேண்டும். நீதி தேவை. எப்படி இறந்தார்? யார் அமிலம் கொடுத்தது? எல்லாம் எனக்குத் தெரிய வேண்டிய தேவை இருக்கிறது.
அந்த பள்ளி அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது. இனி அந்த பள்ளி நடத்தக்கூடாது. என் மகனுக்கு நடந்தது போல் மற்ற பிள்ளைகளுக்கும் வரக் கூடாது. என் மகன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்று எனக்குத் தெரியும். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களைத் தான் பாதுகாக்கின்றனர். 17ம் தேதி என் மகன் இறந்து, என் வீட்டிற்கு காவல்துறையினர் யாரும் வரவில்லை. அதே சமயத்தில் பள்ளிக்கு ஆயிரம் போலீஸ் வரை காவலில் போட்டுள்ளனர். இறந்தது என் மகன். பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். என் மகனின் உடலை நாங்கள் எடுக்க மாட்டோம். நாளை மாலை வரை எதுவும் கிடைக்கவில்லை என்றால் மறுநாள் காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வோம். நானும் என் மனைவியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம். நாங்கள் இறந்தாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. என் மகன் இல்லாத போது இனி நாங்கள் இருந்து எதற்கு. 23 நாள் மருத்துவமனையில் இருந்தான். அவன் ஒன்றும் பேச முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டான். அப்பொழுதே மருத்துவமனையில் தான் இருந்தான். இப்பொழுதும் அவர்கள் வைத்திருக்கட்டும். எங்களுக்கு எப்பொழுது நீதி கிடைக்கிறதோ அப்பொழுது எடுத்துச் செல்கிறோம்.
கொடுத்தவர்களை அடிக்கனும் என்று எல்லாம் எங்களுக்கு எண்ணம் இல்லை. எதற்கு கொடுத்தான். என் மகனை கொன்றது ஏன்? அது தான் எங்களுக்குத் தெரிய வேண்டும். அது தெரியும் வரை போராட்டம் தான்.