கோவில் விழாக்களின் போது குறிப்பிட்ட ஒரு நபருக்கு தலைப்பாகை அணிவிப்பது, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீசண்டிவீரன் கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் ஆகியன பிரசித்தி பெற்ற கோவில்கள். இக்கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதையோ செய்யப்படாது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சசி பாண்டித்துரை என்பவர் தனக்கு முதல் மரியாதை செய்யுமாறும், சிறப்பு மரியாதை கொடுக்குமாறும் வலியுறுத்தி வருகிறார்.
விழாவின் பொழுது கையில் குடை பிடித்தவாறு அவரது அடியாட்களுடன் திருவிழாவில் கலந்து கொள்கிறார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பரிவட்டம் கட்டிக் கையில் கோலுடன் குடை பிடித்து ஊர்வலத்தில் கலந்துகொள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி, இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டுகளும் இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதற்காக பல்வேறு வழிகாட்டுதல்களினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது. அனைத்து மக்களும், அனைத்து கிராம மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு யாரும் வற்புறுத்தக் கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.