திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், இந்திய ஒற்றுமை நீதிப் பயண விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 65 அடி அளவில் கொடியேற்றுதல், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மூவரின் முழு உருவச் சிலை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற இருந்தது. இதற்கு கொடி ஏற்றி வைத்து சிறப்பிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் விழா தொடங்கும் முன்பு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற பொருளாளர் சையத் புர்ஹான் மற்றும் திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய தலைவர் ஜாவித் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்தனர். திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முன்பு இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இரு தரப்பினருக்கும் இடையே யார் முதலில் மாலை போடுவது என்கிற பிரச்சனை உருவாகி வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பானது. இதனை அறிந்த திருப்பத்தூர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி முப்பெரும் விழாவிற்கு அழைத்துச் சென்றார்.