இன்று இரு பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களது கையில் மனு ஒன்றை வைத்திருந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் மற்றவர்கள்போல ஒரு பிரச்சனை குறித்த மனு என்றுதான் நினைத்தார்கள். அவர்களது மனுவைப் படித்தவுடன்தான் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது...
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கும்போது, எங்களுக்கு அச்சமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக காவல்துறை இதை கண்டுகொள்ளாமல் அல்லது கண்டுபிடிக்காமல் இருந்துள்ளது. எனவே எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது வந்துள்ளது. நாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துப்பாக்கி தேவை பெண்கள் சுய பாதுகாப்புக்காக போலீசாரை நம்ப முடியாமல் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ள சம்பவம் தமிழகத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுவதை போல உள்ளது.
ஓவியா மற்றும் தமிழ் ஈழம் என்ற மாணவிகள்தான் அவர்கள். தமிழ் ஈழம் இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டும், ஓவியா ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அவர்கள் கொடுத்த மனு தற்போதைய நிலை குறித்த பெண்களின் பயத்தை கூறுவதாக இருந்தது, மற்ற இடங்களைக் காட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடு என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தற்போது பயப்பட தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.