நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் மோகனூரில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பரமத்தி வேலூர் பகுதியில் டி.எஸ்.பி. ராஜு தலைமையில், காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார், போலீஸாருடன் வேலூர் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இரண்டு மினி ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோக்களில் போதை வஸ்துகளாக பயன்படுத்தப்படும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் போல இருந்ததால், உணவு பாதுகாப்பு அலுவலரை வைத்து சோதனை செய்தனர் அந்த பொருட்கள் போதைக்காக பயன்படுத்தும் குட்கா என்று தெரியவந்தது.
ஆட்டோவில் இருந்தவர்களை கைது செய்து சுமார் ஆயிரத்து மூன்னூறு கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினார்கள். காவல் நிலையத்தில் அவர்களை விசாரணை செய்ததில் மதன்குமார் (24), விக்னேஷ் (28) முத்துக்குமார் (39), என தெரியவந்தது. குட்கா போதைப்பொருளை பரமத்தி வேலூரைச் சேர்ந்த தீனதயானள் மற்றும் ஜெகன் என்பவர்கள் வேனில் ஏற்றி வேலூர் மற்றும் கரூர் பகுதிகளில் கடைகளுக்கு சப்ளை செய்ய அனுப்பி வைத்ததாகவும், மோகனூர் பாலப்பட்டியில் அவர்களது குடோன் ஒன்று இருப்பதாகாகவும் தெரியவந்தது. உடனடியாக மோகனூர் காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் போலீஸ் படையுடன் சென்று பாலப்பட்டியில் குடோனில் இருந்த புகையிலை குட்கா பொருட்கள் சுமார் இரண்டாயிரம் கிலோவை கைப்பற்றிறினார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அங்கு இருந்த விஜய் (எ) ராமலிங்கம் என்பவரை கைது செய்தனர். மேற்கண்ட இரண்டு வாகனங்கள் மற்றும் குடோனில் இருந்து மொத்தம் மூவாயிரம் கிலோ புகையிலை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ருபாய் இருபது லட்சமாகும்.
பரமத்திவேலூர், மோகனூர் , கரூர் பகுதிக்கு குட்கா பொருட்கள் சப்ளை செய்வது சேலத்தை சேர்ந்த ஒரு வட மாநில மார்வாடி வியாபாரி என்பதும் அந்த மார்வாடி வியாபாரி சேலம் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தாலும் அந்த மார்வாடி வியாபாரி மீது எந்த வழக்கும் போடவில்லை போலீஸ் . சேலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊராச்சே பிறகு எப்படி போலீஸ் அடுத்த நடவடிக்கைக்கு போகும்? என நம்மிடமே கேள்வி கேட்டனர் நாமக்கல் போலீசார்.