Skip to main content

கல்யாணராமன் கைது... இரட்டை வேடம் போடுகிறதா பாஜக?

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Kalyanaraman arrested by police

 

முகமது நபியை இழிவு செய்து பேசியதாக இஸ்லாமிய கூட்டமைப்புகள் பல்வேறு தளங்களில் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்யாணராமனை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.

 

எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ. மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பாஜக சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்யாணராமனோ, இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக ஆட்சேபத்துக்குரிய, ஆபாசக் கருத்துகளை பதிவுசெய்தார். இந்தக் கருத்துக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கிய நிலையில் கல்யாணராமனுக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு மட்டங்களிலிருந்து ஆங்காங்கே எதிர்ப்பாளர்கள் தோன்றின.

 

Kalyanaraman arrested by police

 

இதனால் தமிழக காவல்துறையும் கல்யாணராமன் மீது மதங்களிடையே பிரிவினை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட ஐபிசி 147,148,149,504,506(2), 153(a),153(b), 269 உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

 

மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவோ, "அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் குறித்து அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சுகள் முஸ்லிம்களையும், நல்லிணக்கம் பேணும் சகோதர இந்து, கிறிஸ்தவ மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் தருணத்தில் வகுப்பு கலவரத்தைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் ரகசியத் திட்டத்தின் அடிப்படையில் அவர் மேட்டுப்பாளையத்தில் நச்சுக் கருத்துகளைப் பேசினாரோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

 

தொடர்ந்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூகப் பதற்றத்தை உருவாக்கிவரும் கல்யாணராமன் மீதும் அவரைப் பின்னாலிருந்து இயக்குபவர்கள் மீதும், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இதற்கு முன்னதாகவும் இறைத்தூதர் முகமது நபி குறித்து இழிவாகவும், ரஷ்யப் புரட்சியாளர் லெனினை ஒரு காட்டுமிராண்டி எனவும், ஆடு புருஷர்கள் மனநோயாளியாகி வருவதாக எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது சர்ச்சைக்கு வித்திட்டது. இது பாஜகவிற்கு சிக்கலை  ஏற்படுத்திய நிலையில், "சம்பந்தப்பட்ட கல்யாணராமன் பாஜகவில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை எனவும், அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அறிவித்தார் மாநில பொதுச் செயலாளரான நரேந்திரன்.

 

"சர்ச்சை கருத்துக்கள் எழும் ஒவ்வொரு வேளையிலும், ஒருபக்கம் அதனை பூசி மெழுகும் வேலையாக கைது செய்வது போல் நடித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது இந்த அரசு! பாஜகவிற்கும் கல்யாணராமனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பாஜக, மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவரை பேச வைத்ததன் மர்மமென்ன? பாஜக இரட்டைவேடம் போடுவது உண்மைதானே?" என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் உட்பட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இதே வேளையில், மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கம் காட்டும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரைசுதீனோ, "தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள், கட்சிகள்  மீதான  விரோதமோ வெறுப்போ இருந்தால், அவர்களைப் பற்றி பேசட்டும். அதை விட்டுவிட்டு நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசி தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி பழியை  பா.ஜ.க மீது போட துடிக்கும் இவர்கள் மீது உடனடி கட்சி நடவடிக்கை தேவை. அரசியல் செய்யலாம், கலவரத்தை தூண்டி குளிர் காய நினைக்க கூடாது." எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்