இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி பல உயிர்களை பலிவாங்கியது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், கரோனாவில் இருந்து தற்காத்துகொள்ள மக்கள் அதிகம் தடுப்பூசிகளையே நம்பியிருந்தனர். ஆனால், அவ்வப்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இடையில் இரண்டு, மூன்று நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணியும் நிறத்தப்பட்டும் இருக்கிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தடுப்பூசியை தமிழகத்திற்கு அதிகமாக வழங்கக்கோரியும் ஒன்றிய அரசை கண்டித்தும் பிரதமர் மோடிக்கு காலி சிரஞ்சுகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், ‘நாடு முழுவதும் இரண்டாம் அலையின் தாக்கமானது பரவலாக காணப்படுகிறது. இதை தடுப்பதற்கான ஒரு தீர்வாக இருப்பது தடுப்பூசி மட்டும்தான் என ஒன்றிய அரசும் கூறுகிறது. கரோனாவை ஒழிப்போம் என ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த ஒன்றிய அரசானது, அந்த கரோனாவை தடுக்கும் தடுப்பூசிகளை முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டிய தடுப்பூசிகளை வழங்காமல், சொர்ப்பமான தடுப்பூசிகளை மட்டும் வழங்கி வருகிறது, தமிழர் விரோத பாஜக அரசு. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வானது தமிழ்நாட்டில் அதிகமாகவே காணப்படுகிறது. அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் சாரை, சாரையாக சென்று, தடுப்பூசி முகாம்களின் வாசலில் விடியற்காலையிலேயே காத்துக் கிடப்பதை நம்மால் காண முடிகிறது.
ஆனால் இதில் சரிபாதி மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் தினமும் திரும்பிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில், கரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து மோடிக்கு காலி சிரஞ்சுகள் அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.