தமிழ்நாடு முழுவதும் இன்று (02.10.2024) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் கிராமத்தின் அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்களுக்குப் பயனாளிகள் தேர்வுகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதே போலப் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலெட்சுமி லெனின் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் சாலை, அரசுப் பள்ளி நுழைவாயில் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு கிராம சபைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சாலை வசதி மேம்படுத்திக் கொடுத்த மாவட்டக் கவுன்சிலர் சரிதாமேகராஜன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதோடு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் முருகானந்தம் நன்றி கூறினார்.