அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தியதாக சசிகலா மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் அமைச்சர்கள் புகார் அளித்தனர்.
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் சென்றார். இதற்கு அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி எம்.பி., நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சசிகலா மீது அ.தி.மு.க. கொடியைப் பயன்படுத்தியதாகப் புகார் அளித்தனர். இந்தப் புகாரில், அ.தி.மு.க. கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு வரும்போது அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கைக் கோரியதாகவும் தகவல் கூறுகின்றன.
பிப்ரவரி 8- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா திரும்பும் நிலையில், அவர் மீது அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.