டிடிவி தினகரன் அணியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
டிடிவி.தினகரன் அணிக்கு சென்ற தங்க தமிழ்ச்செல்வனுக்கு எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதோடு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் தேனியில் நின்று தோல்விகண்டார். கடந்தசில தினங்களாக தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும், பிரிந்து மீண்டும் அதிமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வந்தன.
இந்த நிலையில் அமமுக பிரமுகரை தொடர்பு கொண்டு தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் குறித்து ஆபாசமாகவும் சவால் விடுத்து பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில்,
தங்க தமிழ்ச்செல்வன்: ஹலோ
அமமுக கட்சி பிரமுகர்: கேக்குதுண்ணே கேக்குதுண்ணே
தங்க தமிழ்ச்செல்வன்: எங்கே இப்ப அவர்(டிடிவி.தினகரன்)
அமமுக கட்சி பிரமுகர்: இல்லண்ணே நான் ஊருக்கு வந்துட்டேன் அண்ணே
தங்க தமிழ்ச்செல்வன்: இந்த மாதிரி அவர் அரசியல் -------- பண்ணுவதை நிப்பாட்ட சொல்லுப்பா அவனை, உங்க அண்ணன
அமமுக கட்சி பிரமுகர்: ஏன் அண்ணே என்னண்ணே
தங்க தமிழ்ச்செல்வன்:உண்மையிலேயே நான் வந்து விஸ்வரூபம் எடுத்தா நீங்க அழிஞ்சு போவீங்க நீ உட்பட அழிஞ்சு போவ, நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம்...... சொல்றாங்க, நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுறேன் பாரு பாரு, என்ன நடக்குதுன்னு பாரு, ஆனா இந்த மாதிரி --------- அரசியல்வாதிய, உங்க டிடிவி தினகரன் கிட்ட சொல்லிடு இந்த மாதிரி அரசியல் பண்ண வேணாம் நீ தோற்றுப் போவ என்னைக்கும் ஜெயிக்க மாட்டனு
என முடிகிறது அந்த ஆடியோ. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த ஆடியோ குறித்து தனியார் சேனலில் விளக்கமளித்து பேசிய தங்கதமிழ்செல்வன்,
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். தலைமை கட்சியில் சிலவற்றை மாற்றவேண்டும். நிர்வாகம் சரியாக இல்லை. நெல்லையிலும், கோயம்புத்தூரிலும் மண்டல பொறுப்பாளர்களால் கட்சி அழிந்துவிட்டது. இதையெல்லாம் சரி செய்யுங்கள் என்று அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
அதற்கு என்னை கூப்பிட்டு கண்டிக்காமல் சிலர் மூலம் சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறாக செய்தி போடும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. உண்மையிலேயே நான் தவறு செய்திருந்தால் என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே இந்த தலைமை. ஏன் இந்த மாதிரி சின்னத்தனமான செயல்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே என்னை பிடிக்காவிட்டால் கட்சியை விட்டு நீக்குங்கள் என்கிறேன்.
நான் நேர்மையானவன் ஒரு தகவலை சொல்கிறேன் அது பிடிக்கவில்லை என்றால் என்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள். ஏன் சிலரை கூட்டமாக வைத்துக் கொண்டு வலைதளங்களில் என்னை பற்றி தவறான செய்தியைப் போடுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதுக்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார்.