தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவியின் தீவிர ஆதரவாளரான தங்க. தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ்விடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்தவேட்புமனு தாக்கலுக்காக தேனி பங்களாமேடு பகுதியில் இருந்து தங்க. தமிழ்செல்வன், பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு, ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயகுமார் ஆகியோர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர். அதன் பின் தான் தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய தங்க. தமிழ் செல்வனோ.. உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. எந்த சின்னம் கொடுத்தாலும் அது மக்களிடையே பிரபலம் அடையும். அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற தேர்தல் தர்மத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல். இதில் தர்மம் வெல்லும். அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டத்திற்கான இரயில்வே திட்டத்தை கொண்டு வரவில்லை. எங்களுக்கும் அதிமுகக்கும் போட்டி கிடையாது.
காங்கிரசுக்கும் எங்களுக்கும் தான் போட்டி. அண்ணன் இவிகேஎஸ் இளங்கோவன் பெரிய மனிதர் வீட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவர் மரியாதையாக பேசுகிறார். என்னுடைய நடை உடை பாவனை நன்றாக உள்ளது என்று கூறிய அவருக்கு என்னுடைய நன்றி. அவரும் என்னைபோல் ஒரு எதார்த்தமான மனிதர் தான் என்று தெரிவித்தார்.