ஏப்ரல் 3ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, யார் போராட்டம் அறிவித்து ஆதரவு கேட்டாலும் அதற்கு ஆதரவளிப்பது என்று மஜகவின் தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், ஏப்ரல் 3 அன்று நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டுள்ளது.
மஜகவின் சார்பில் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது என்றும், போராட்டம் களத்திலும் பங்கேற்பது என்றும் முடிவு செய்துள்ளோம். மேலும் தனித்தனியாக பலரும் போராட்டங்களை முன்னெடுத்தாலும், ஒருங்கிணைந்த மக்கள் போராட்டத்தை உருவாக்குவது குறித்து அனைத்து தரப்பும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.