Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தி.மு.க ஆதரிக்கிறதா? ராமதாஸ்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018
ramadoss


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது  மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
 

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து  உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு யாருடைய உரிமையையும்,  சலுகையையும் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது. இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்’’ என்றும் தான் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 
 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக  கூட்டணிக் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியதுடன், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்; வன்கொடுமைச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாதவாறு அதை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் தம்பி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பை எந்த அடிப்படையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதிர்க்கின்றன என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்டத்திலும் எதிர்க்கவில்லை. அதேபோல்,  பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அந்த சட்டம் தான் பாதுகாப்பு என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், அவர்கள் அல்லாத 81 விழுக்காடு மக்களை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது. உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய கத்தி, உயிரை பறிப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டில் அதிமுகவும், திமுகவுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


அவ்வாறு இருக்கும் போது, அப்பாவிகள் பழிவாங்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை திமுகவும், அதிமுகவும் எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்? வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்து, இன்று வரையிலான 30 ஆண்டுகளில் அச்சட்டத்தால் தமிழகத்தில்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களே ஆதாரம்.
 

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு ஆயிரம் உதாரணங்களை கூற முடியும். 2010 ஆண்டு திமுக ஆட்சியின் போது, சேலம் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே நடந்த மோதல் தொடர்பாக, அப்போது சென்னையில் இருந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் இது குறித்து அவர் முறையிட்ட போது, குறுக்கிட்டுப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கலைஞர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்றும், திமுக மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ் ராஜன் மீதே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
 

திமுக செயல்தலைவர் தம்பி ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் அவர்களது கட்சி நிர்வாகிகளுக்கு   கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2014-ஆம் ஆண்டில் திமுகவில் குழு மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, பகுதி செயலர் ஜெயராமன் ஆகியோர் தங்களை  சாதியின் பெயரால் திட்டியதாகக் கூறி, மு.க. அழகிரி ஆதரவாளர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தனர். அதன்படி ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்  ஆத்திரமடைந்த திமுக தலைமை, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பொய்வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு  காரணமான அழகிரி ஆதரவாளர்கள் எம்.எல்.ராஜ், அசோக்குமார், ராஜேந்திரன், முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியிலிருந்து நீக்கி 21.01.2014 அன்று  அறிவிப்பு வெளியிட்டது.
 

அடுத்த சில நாட்களில் அதாவது 24.01.2014 அன்று மு.க. அழகிரியை திமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,‘‘மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க துணை போகின்றனர். இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து குழப்பம் விளைவிக்க முயன்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டிருந்தது.  இத்தனை ஆதாரங்களுக்குப் பிறகும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று தம்பி ஸ்டாலினால் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது பொய் என்பதை அவரே அறிவார்.
 

அரசியல்வாதிகள், அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைக் கடந்து  நாடு முழுவதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்த்து தான் மராட்டிய மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் மராத்தா மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிறைவாக 09.08.2017 அன்று மும்பையில் நடைபெற்ற நிறைவுப் பேரணியில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியையே இது காட்டுகிறது.
 

பட்டியலின, பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுப்பதும், அது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்துவதும் முக்கியமாகும். அதற்கு மாறாக, ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் திமுகவும், அதிமுகவும் அப்பாவி மக்களை பழிவாங்குவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா? என்பதை அக்கட்சியின் தலைமைகள் விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Next Story

'அதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?'-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'What's the secret? Will M.K.Stalin explain?'-pmk Ramadoss question

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக, கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் செய்தது துரோகம் என விமர்சனம் செய்துள்ளது

இதுகுறித்து பாமகவின் நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த  கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது  மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த  நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன்  விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும்  கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது  தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான். கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி தில்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக , கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.06.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.08.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கலைஞர் அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கலைஞர் மவுனமாக இருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

இலங்கைக்கு கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதை  காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார்.  ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது. இந்த சிக்கலில் திமுக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.  

நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது,  ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள்  இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில்  திமுக - காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின்  உச்சமாகவே உள்ளன.  ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?' என தெரிவிக்கப்பட்டுள்ளது.