ஆடி மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று, நீா் நிலைகளில் மொத்தமாகக் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மக்களின் வழக்கம்.
வாழ்வில் துன்பங்கள் நீங்கி சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் விதமாக முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால், எல்லாம் நீங்கும் என்பது இந்து மத நம்பிக்கை. அந்த வகையில், இன்று (11/02/2021) தை அமாவாசையையொட்டி கடற்கரை, ஆறு மற்றும் குளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்தனர்.
இதில், கன்னியாகுமரியில் திருவேணி சங்கமத்தில் (முக்கடல் சந்திக்கும்) கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து அதிகாலையில் அங்கு குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணத்தைச் செய்தனர். பின்னர், மக்கள் அனைவரும் கடலில் இறங்கி நீராடினார்கள். இதற்காகக் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதனால் கன்னியாகுமரியில் மூச்சு முட்டும் அளவுக்கு கூட்டம் நிரம்பியது.
தை மாத அமாவாசையையொட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வைரக் கிரிடம், தங்கக் கவசம், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் வருடத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் திறக்கப்படும் பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் இன்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.