காவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் வரும் 23 ம் தேதி நடக்க இருந்த இயற்கை வளம், கணிம வளம் பாதுகாப்பு மாநாட்டிற்கான அனுமதியை காவல்துறை மறுத்திருக்கிறது.
மாநாட்டில் அ.தி.மு.க பா.ஜ.கவை தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், இயங்கங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருந்த நிலையில் மாநாட்டின் ஒருங்கினைப்பாளரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கினைப்பாளருமான பேராசிரியர் ஜெயராமன் மீது 24 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரனையில் இருப்பதால் அனுமதியை மறுக்கிறோம் என காக்கிகள் கூறி மறுத்திருப்பதால் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வரும், 23 ம் தேதி இயற்கைவளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார் பேராசிரியர் ஜெயராமன். அந்த மாநாட்டில் பழ நெடுமாறன், திருமாவளவன், டி.டி.வி.தினகரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா , எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, வழக்கறிஞர் பாலு, கொளத்தூர் மணி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்குகொள்ள இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்க மாநாடாக நடக்க இருந்த மாநாட்டிற்கு மயிலாடுதுறை காவல்துறை திடிர் தடை போட்டிருக்கிறது.
மயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசன் இதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார். தடைக்கான நகலை பேராசிரியர் ஜெயராமன் வீட்டின் சுவற்றில் ஓட்டிவிட்டு சென்றுள்ளனர்.
அந்த ஆணையில், "இந்த மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பெரிய அளவில் சட்டம் ஓழுங்கு பாதிக்கும். மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசின் திட்ட பணிகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. அதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி மக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள் அந்த வகையில் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனையில் இருக்கிறது. இந்த மாநாட்டின் மூலமும் அது போல் பிரச்சினை எழலாம். அதனால் நீங்கள் நடத்த இருந்த மாநாட்டிற்கான அனுமதியை ரத்து செய்கிறோம், " என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பேரசிரியர் ஜெயராமனிடம் கேட்டோம், " மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்திவிடும் , மக்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள், மத்திய அரசின் திட்டம் பலிக்காது என்பது மத்திய அரசின் கவலை, மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி நடக்கிறதா என்பது புரியாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர், வரும் தலைவர்கள் அதிமுக அரசின் கையாலாகாத நிலை குறித்து மக்களிடம் பேசி விடுவார்கள் என்கிற கவலை அதிமுகவினருக்கு . மணல் கொள்ளை குறித்து கூறிவிடுவார்கள் என்கிற கவலை காக்கிகளுக்கு, அதனால் தான் தடை போடுகின்றனர். சட்டபடி மாநாட்டை நடத்துவோம்" என்கிறார்.