சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. சுமார் 397 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கிறது. தற்பொழுது பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது.
அதே சமயம் சென்னையிலிருந்து தென் மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 100 அரசு பேருந்துகளை வைத்து முதற்கட்டமாகப் பேருந்து நிலையத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் வெளியூர் செல்பவர்கள் இந்த பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனப் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.