திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், குரங்குகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி கிராமம் வனப்பகுதிகளைச் சார்ந்துள்ளது.
சமீப காலங்களில் இப்பகுதியில் குடியேறியுள்ள குரங்குகளின் கூட்டம், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்திவருகிறது. குடியிருப்புகளின் உள்ளே புகுந்துவிடும் குரங்குகள், அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றுவிடுவதாகவும், கைக்குழந்தைகளைத் தொட்டிலில் வைத்துவிட்டு வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றும் கூறும் பெண்கள், கைக்குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் அங்குள்ள கடைகளில் உள்ள சிறுதீணிப் பொட்டலங்களைத் தூக்கிச் செல்வதாகவும், கடைகளில் எந்தவிதப் பொருட்கள் இருந்தாலும் அவற்றை சேதப்படுத்திவிடுதாகவும் வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களையும் குரங்குகள் விட்டுவைப்பதில்லையாம். அங்குள்ள பகவதி அம்மன் ஆலயம், நாடக மேடை, பேருந்து நிறுத்தம், தொடக்கப்பள்ளி வளாகம், வங்கி வளாகம் என அப்பகுதியில் கூட்டம் கூட்டமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும் நூற்றுக்கணக்கான குரங்குகளால், தங்களது வாழ்வாதாரம் அன்றாடம் பெரும் அச்சத்துடன் கடந்து செல்வதாக கூறுகின்றனர். குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிகளில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.